இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலியா பிரதமர் விடுத்துள்ள அறிக்கை

மேலும் 23 இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட வேளையில் அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 3.50 மணியளவில் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு, கொஸ்வாடிய, மூதூர் பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட இவர்கள் கடந்த மே மாதம் 27ஆம் திகதி வென்னப்புவ கொஸ்வாடியவில் இருந்து பல நாள் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எவரும் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு பரவலாக செயற்படுவதாகவும் இன்று காலை மெல்பேர்னில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
இங்கு வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தில் வருபவர்கள் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இருப்பினும், எந்த தளர்வும் செய்யப்படவில்லை என்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Claire O'Neill இலங்கை வந்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சட்டவிரோத மனித குடியேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும்.
சற்று முன்னர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த அவர், பின்னர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
283 Views
Comments