இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் இன்று(29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயணித்த இரு படகுகளும் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
நெடுந்தீவு கடற்பரப்பின் தென் பகுதிக்கும் தலைமன்னார் கடற்பரப்பின் வட பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தங்கச்சிமடம் மீனவர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 55 இந்திய மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் இம்மாதம் 21ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 3 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதனிடையே, இலங்கை சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
மீனவர் விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தனது கடிதத்தினூடாக வலியுறுத்தியுள்ளார்.
120 Views
Comments