மன்னார் - அதானி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்றிட்டம் தொடர்பான விடயங்களை மீள ஆராய புதிய அமைச்சரவை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
15

மன்னார் - அதானி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்றிட்டம் தொடர்பான விடயங்களை மீள ஆராய புதிய அமைச்சரவை

மன்னார் - அதானி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய செயற்றிட்டம் தொடர்பான விடயங்களை மீள ஆராய புதிய அமைச்சரவை

மன்னாரில் இந்தியாவின் அதானி நிறுவனத்தினூடாக காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பான விடயங்களை மீள ஆராய புதிய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(14) அறிவித்தார்.



காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு கடந்த அமைச்சரவை வழங்கிய அனுமதியை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வனஜீவராசிகள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட சில தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீண்டும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



உயர் நீதிமன்ற நீதியரசர்களான S.துரைராஜா, A.H.M.D.நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 


எதிர்வரும் 7ஆம் திகதி உத்தேச காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான விடயங்களை மீள ஆராய புதிய அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், அமைச்சரவை செயலாளர், வலுசக்தி அமைச்சர், சட்ட மாஅதிபர் ஆகியோரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், கலாநிதி அவந்தி பெரேரா மன்றில் அறிவித்தார். 



இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆகியன தொடர்பில் கருத்திற்கொண்டு, குறித்த செயற்றிட்டம் தொடர்பான விடயங்கள் குறித்த தினத்தில் மீள ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 



இதற்கமைய, எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படும் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்காக திகதியை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 



அத்துடன், குறித்த தினம் வரை இந்த செயற்றிட்டம் தொடர்பில் தற்போது காணப்படும் நிலைமையை அதே விதத்தில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றுக்கு அறிவித்தார். 



இந்த விடயங்களுக்கு இணக்கம் வௌியிட்ட மனுதாரர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, குறித்த மனுக்களின் பிரதிவாதிகள் மாற்றமடைந்துள்ளமையால் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை உறுப்பினர்களையும் பிரதிவாதிகளாக பெயரிட்டு மனுவை திருத்துவதற்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார். 



குறித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதியரசர்கள் குழாம், இந்த செயற்றிட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் அவதானிப்புகளை மேற்கொள்ளுமாயின், அந்த தீர்மானங்களை 2025 ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னதாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

views

152 Views

Comments

arrow-up