ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை வழிபடும் சந்தர்ப்பம் இன்று முதல்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை நேரடியாக கண்டு வழிபடுவதற்கான சந்தர்ப்பம் இன்று முதல் பக்தர்களுக்கு கிட்டவுள்ளது.
உலகவாழ் மக்களுக்கு ஆசி வேண்டி இன்று முதல் 10 நாட்களுக்கு ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தல் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தலை முன்னிட்டு கண்டி நகரம் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புத்த பகவானின் இடது தந்த தாது (DHANTHA THADHU)இலங்கைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக கலிங்க தேசத்தை ஆட்சிசெய்த குகசீவ (GUGASEEWA) மன்னரின் பொறுப்பில் இருந்தது.
இந்த புனித சின்னத்தை பாதுகாத்து வழிபாடுகளை நடத்தும் பணி மன்னரின் மருமகனான இளவரசன் தந்தவிடம் (DHANTHA)ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவர் இளவரசி ஹேம மாலாவின் கணவராவார்.
குகசீவ (GUGASEEWA) மன்னரிடமிருந்து புனித தந்த தாதுவை கையகப்படுத்துவதற்கான போர் ஆரம்பமானதை அடுத்து மன்னரின் கட்டளைக்கு அமைய இளவரசர் தந்த, தனது மனைவியான இளவரசி ஹேம மாலாவுடன் புனித தந்ததாதுவை எடுத்துக் கொண்டு, இலங்கை மன்னன் கீர்த்தி ஶ்ரீ மேகவர்ணனின் ஆட்சிகாலத்தில் நாட்டை வந்தடைந்தார்.
310 ஆம் ஆண்டில் இளவரசி ஹேம மாலா தனது கூந்தலுக்குள் பாதுகாப்பாக மறைத்து எடுத்து வந்த புனித தந்த தாதுவை இன்றும் புத்த பகவானின் உயிரோட்டம் உள்ள புனித சின்னமாக பௌத்த மக்கள் வழிபடுகின்றனர்.
இற்றைக்கு 1,715 வருடங்களுக்கு முன்னர் முதலாவது ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தல் நடைபெற்றதுடன் இறுதியாக இந்த புனித சின்னத்தை 2009 ஆம் ஆண்டு நேரடியாக தரிசிப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
புனித தந்த தாதுவை வழிபடுவதற்காக வருகைதரும் பக்தர்களின் நலன்கருதி, குடிநீர், சுகாதார வசதிகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தலுக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக பத்தாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
புனித வழிபாட்டிற்காக வருகைதரும் மக்கள் அநாவசியமான பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாளிகைக்குள் பிரவேசிக்கும்போது மக்கள், நிறுத்தி வைக்கப்பட்ட தமது கையடக்க தொலைபேசியை மாத்திரமே எடுத்துச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக கெட்டம்பே விளையாட்டரங்கு, கன்னோருவ வீதி, கட்டுகஸ்தோட்டை நான்காம் மைல்கல், பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ கலையரங்க வளாகம், தர்மாஷோக மாவத்தை மற்றும் பி.ரி.ராஜன் விளையாட்டரங்கு, பல்லேகலே பண்டாரநாயக்க வல்லூரி விளையாட்டரங்கு, குருதெனிய ஆகிய பகுதிகளில் வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்டி நகரம் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்களை மாற்று வீதிகள் வழியாக அனுப்பிவைக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
வரிசைகள் காணப்படுகின்ற இடங்கள் தொடர்பில் மக்களுக்கு ஒன்லைன் ஊடாக தகவல்களை பெற்றுக்கொடுக்க விசேட திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
ஸ்ரீ தலதா காட்சிப்படுத்தலை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
8 Views
Comments