யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வேலைத்திட்டம்

ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று(24) நடைபெற்றது.
ஊடகவியலாளர்களின் வகிபாகத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் வட மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்காக இந்த பயிற்சி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் எம்.எம்.மொஹமட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ் ரீமோகன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் பங்கேற்றனர்.
வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் எம்.எம்.மொஹமட் இங்கு தௌிவுப்படுத்தினார்.
ஒழுங்கு முறையின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இங்கு சுட்டிக்காட்டினார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக சில வேளைகளில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
செப்டெம்பர் மாதத்தின் இரண்டாவது வாரமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை ஆணைக்குழு தீர்மானிக்குமாயின் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஒன்றரை மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
இல்லாவிட்டால் இந்தத் தேர்தல் ஆணைக்குழு அடிப்படை உரிமையை மீறிய குற்றச்சாட்டுடன் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகும் என்றும் அவர் கூறினார்.
மாகாண சபைத் தேர்தல் எந்த முறையின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்பதால் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படலாம் எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
151 Views
Comments