தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கான விடுமுறைகளுக்கு மாகாண தபால் மாஅதிபர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள முடியுமென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய முத்திரையிடப்பட்ட பொதிகள் நாளை(26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறியுள்ளார்.
அச்சுப்பணிகள் நிறைவடைந்த நிலையில், தபால்மூல வாக்குச்சீட்டுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தமது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வதற்கான திகதி தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்ய தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 5, 6ஆம் திகதிகளில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஏனைய திணைக்கள அரச உத்தியோகத்தர்கள் தமது திணைக்களங்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தினங்களில் வாக்களிக்கத் தவறும் அரச உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் தத்தமது மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு 712,321 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
152 Views
Comments