பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின் கீழ் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட தீர்மானம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
29

பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின் கீழ் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட தீர்மானம்

பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின் கீழ் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட தீர்மானம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின் கீழ் ஜனாதிபதி வேட்பாளரொருவரை பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 

கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று(29) கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இன்று மாலை இந்த கூட்டம் இடம்பெற்றது. 

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. 

 

இதில் பொதுஜன பெரமுனவின் முன்னிலை சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். 

 

அதற்கமைய, மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தொடர்பில் ஆராய இன்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 

தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எவ்வித கருத்தினையும் வெளியிடவில்லை. 

 

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளனர். 

 

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலர் தமது கட்சியைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக களமிறக்க வேண்டும் என வலியுறுத்தியதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்தார். 

 

அதன்படி பெரும்பான்மையான ஆதரவுடன் கட்சி சார்பில் ஒருவரை வேட்பாளராக தெரிவுசெய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதற்கு எதிராக கட்சியை சேர்ந்த யாரெனும் ஜனாதிபதி வெட்பாளராக போட்டியிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக உடனடியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

 

வெற்றியிடக்கூடிய ஒருவரை எதிர்வரும் சில நாட்களில் வேட்பாளராக அறிவிக்க கட்சி நடவடிக்கை எடுக்குமென அவர் கூறினார். 

 

அவ்வாறு கட்சி சார்பில் வேட்பாளரொருவர் நிறுத்தப்படும் பட்சத்தில், தற்போதைய ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு வழங்கப்பட மாட்டாதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

 

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதே தமது விருப்பம் என வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே அறிவித்துள்ளார். 

 

கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த 30-இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவ வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

 

இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை  நேற்று முன்தினம் சந்தித்தனர்.

 

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெற்றுக்கொள்வது குறித்து அங்கு கலந்துரையாடியுள்ளனர்.

 

ஜனாதிபதி தேர்தலில் தம்மை ஆதரிப்பீர்களா? இல்லையா ? என்ற விடயத்தை உடனடியான அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரனமுனவிடம் கோரியுள்ளார்.

 

பெரும்பாலான கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக தாம் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ரணில் விக்கிரமசிங்க எழுதியுள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

views

213 Views

Comments

arrow-up