வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக கருதி வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
இன்று (09) கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Rathnayake) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் வாக்காளர்கள் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் (08) வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் விநியோகம் இடம்பெற்றது.
நேற்று மாத்திரம் 3.3 மில்லியன் வாக்குச்சீட்டுகள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக தபால் மா அதிபர் பி.சத்குமார (P. Sathkumara) அறிவித்தார்.
இன்றுவரை, மொத்தம் 8.7 மில்லியன் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள சீட்டுகள் இம்மாதம் 14ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
202 Views
Comments