இன்று(19) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்த தடை

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை இன்று(19) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை நடத்தமுடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சை காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக மாகாண, வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இம்முறை உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
இதனிடையே, உதவி மண்டபப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு பரீட்சை மண்டபங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மத்திய நிலையத்திற்கான மண்டப பொறுப்பாளர்கள், மேலதிக மேற்பார்வை பொறுப்பாளர்களுக்கு மாத்திரமே கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
124 Views
Comments