தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதை தடுத்து உயர்நீதிமன்றத்தினால் இன்று(24) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த ஆணையை பிறப்பித்தது.
தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 08 தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைகளுக்கு அனுமதியளித்து இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை முடிவுறும் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மனு மீதான விசாரணை 6 நாட்கள் நடைபெற்றதுடன் கடந்த வியாழக்கிழமை விசாரணை சுமார் 8 மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கொரயா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, சட்டத்தரணி திஷய வேரகொட உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் விடயங்களை சமர்ப்பித்தனர்.
பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்வதற்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்பு பேரவையினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தகைய சூழலில் அவரை அந்தப் பொறுப்பில் அமர்த்த ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன் காரணமாக குறித்த நியமனத்தை செல்லுபடியற்றதாக்கும்படி உத்தரவிடுமாறு மனுக்களின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களில் சபாநாயகர் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் அங்கத்தவர்கள், தேஷபந்து தென்னகோன், சட்ட மாஅதிபர் உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
174 Views
Comments