விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள

மன்னார் - விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை விடுவித்து, வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி வௌியிட்ட வர்த்தமானியை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(22) அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட தரப்பினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(22) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசிய பறவைகள் பாதையின் தென்திசையிலுள்ள பறவைகளின் தங்குமிடமான இலங்கை, வருடாந்தம் இடம்பெயரும் பறவைகளின் கேந்திர நிலையமாக செயற்படுவதாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு மில்லியன் வரையான பறவைகள் குளிர்காலத்தின் போது இந்த பகுதிக்கு வருகை தருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பறத்தல் பாதையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், இந்த பறவைகளின் இடப்பெயர்வு செயன்முறைக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாலை திட்டத்திற்கு அரசியல் மற்றும் வெளிப்புற காரணிகளின் அடிப்படையில் மன்னார் தீவு தெரிவு செய்யப்பட்டதாகவும் குறித்த தீவை தெரிவு செய்வதற்கு விஞ்ஞான ரீதியான அல்லது வேறு விசேட காரணம் எதுவும் இல்லை எனவும் குறித்த நிலப்பரப்பு மிகவும் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் பிரதேசம் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல், வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கு முரணானதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், இந்த செயற்பாட்டினால் குறித்த வன வலயத்திற்குள் பிரவேசிக்கும் இடம்பெயரும் பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனூடாக பிரதேசத்தின் உயிர் பல்வகைமைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக குறித்த வர்த்தமானி அறிவித்தலை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.
இந்த மனு எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
171 Views
Comments