அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
30

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தனது 100ஆவது வயதில் நேற்று(29) காலமானார்.

 

1924ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ப்ளென்ஸ் கிராமத்தில் பிறந்த ஜேம்ஸ் அர்ள் கார்ட்டர்(James Earl Carter) நண்பர்களிடையே ஜிம்மி எனும் செல்லப் பெயரால் அழைக்கப்பட்டார்.

 

ஜிம்மி கார்ட்டரின் சிறுபராயம், தந்தையின் மரமுந்திரிகை பண்ணையை சுற்றியே அமைந்திருந்தது.

 

 

மின்சார வசதிகள் கூட இல்லாத ப்ளென்ஸ் பகுதி, நாட்டின் எதிர்காலத் தலைவரை தாமே உருவாக்கப் போவதை அன்று நினைத்தும் பார்த்திருக்காது.

 

 

சிறுவயது முதல் பாடசாலை கல்வியில் மிகுந்த கவனம் செலுத்திய ஜிம்மி கார்ட்டர், பின்னர் மேரிலேண்டில் கடற்படை அகடமியில் பயிற்சிகளையும் பெற்றார்.

 

 

தனது கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், அமெரிக்க கடற்படையில் இணைந்தார்.

 

 

கார்ட்டர் 1946ஆம் ஆண்டில் தனது காதலி ரோசலின் ஸ்மித்தை திருமணம் செய்து 77 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்ததுடன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 96 வயதில் ரோசலின் ஸ்மித் காலமானார்.

 

 

இதனையடுத்து ஜனநாயகக் கட்சியில் அவர் உறுப்புரிமை பெற்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வளர்ச்சி கண்டதுடன், 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

 

 

மனித உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியமைக்காகவும் உலகளாவிய ரீதியில் நிலவிய யுத்த சூழ்நிலைகளை சமாளிக்க முயற்சிகளை மேற்கொண்டமைக்காகவும் 2002ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நொபல் பரிசு வழங்கப்பட்டது.

 

 

எகிப்து - இஸ்ரேல் இடையிலான 1978ஆம் ஆண்டு கேம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கைகளின் மத்தியஸ்தராக இருந்து 1979ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சமாதான உடன்படிக்கைக்கு வழிவகுத்தார்.

 

 

1979 இஸ்லாமியப் புரட்சியின் பின்னர் 444 நாட்களாக பணயக் கைதிகளாக தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்த 52 ஊழியர்களை விடுவிக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் ஜனாதிபதியாகவும் இருந்தார்.

 

 

1980ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக அவர் பிரச்சாரம் செய்தபோது, ​​பணயக்கைதிகளுக்கான அமெரிக்க மீட்புப் பணி ஏப்ரல் மாதம் தோல்வியடைந்தது.

 

 

8 அமெரிக்கர்கள் இறந்தனர்.

 

 

இது தேர்தலின் திருப்புமுனையாக அமைந்ததுடன் ரீகனுடனான ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான முக்கிய காரணமாகவும் இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

 

 

1981ஆம் ஆண்டில் ரொனால்ட் ரீகன் பதவியேற்ற சில நிமிடங்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

 

 

ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் இரண்டாவது தடவை போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டில் கார்ட்டர் அறக்கட்டளையை ஸ்தாபித்தார்.

 

 

இது அவரது சர்வதேச சமாதானம், ஜனநாயகம், பொது சுகாதாரம் , மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

 

 

1980 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீங்கிய ஜனாதிபதி கார்ட்டர்,  ஜோர்ஜியாவில் மரமுந்திரிகை பண்ணைக்கே மீண்டும் சென்றார்.

 

 

வாழ்வின் இறுதிப்பகுதியில் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் சமூக சேவைகளில் அவரது பங்கு அளப்பரியது.

 

 

முன்னாள் ஜனாதிபதியின் மறைவு தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், கொள்கைகளை பின்பற்றும் மரியாதையும் நற்பண்புகளும் நிறைந்த மனிதர் கார்ட்டர் எனக் கூறியுள்ளார்.

 


ஜிம்மி கார்ட்டருக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் வொஷிங்டனில் அரச மரியாதையுடன்  அன்னாரது இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

 

 

வௌ்ளை மாளிகைக்குச் சென்ற நிலக்கடலை விவசாயி என அனைவராலும் அறியப்பட்ட ஜிம்மி கார்ட்டரின் புகழ், அமெரிக்க வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.​

views

83 Views

Comments

arrow-up