தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் : ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேரும் சரீரப்பிணையில் விடுவிப்பு

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான நுவரெலியாவிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேரும் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று(03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் முதலாவது சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட பீட்ரூ தோட்டத் தொழிற்சாலைக்குள் சிலர் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஜூன் மாதம் முதலாம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பீட்ரூ தோட்ட நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய வழக்கை பரிசீலித்த நீதிபதி, இருதரப்பு விடயங்களையும் ஆராய்ந்து, குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
38 Views
Comments