இலங்கை ஜனாதிபதி - இந்தியக் குடியரசு தலைவர் கலந்துரையாடல்

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருநாடுகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனிடையே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்திய கைத்தொழில் சம்மேளத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில்முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.
இருநாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்கு தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.
இதேவேளை, ஜனாதிபதி காலை புத்தகயாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய விஜயத்தை டெல்லியில் நிறைவு செய்து இன்று பிற்பகல் ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
78 Views
Comments