உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான எஞ்சிய இழப்பீட்டை ஆகஸ்ட் 30க்கு முன்னர் செலுத்துமாறு மைத்திரிபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான எஞ்சிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டீ. நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபா ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
எஞ்சிய தொகையைச் செலுத்துவதற்கு 6 வருடங்கள் கால அவகாசம் வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றமையின் பின்னர், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தாக்கல் செய்த சில அடிப்படை மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு செலுத்தப்பட வேண்டுமென 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிசிர மெண்டிஸ், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
187 Views
Comments