ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று(28) தள்ளுபடி செய்யப்பட்டது.
சட்டத்தரணி ஆர்.எஸ்.பீ.ரணசிங்கவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பதில் பொலிஸ் மாஅதிபரை நியமிக்கவும் உயர் நீதிமன்றத்திற்கு நீதியரசர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்காமையின் ஊடாக ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
காமினி அமரசேகர, திலீப் நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை வாபஸ் பெறுவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரினார்.
இந்த கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த சட்ட மாஅதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மனுவில் அச்சுப்பிழை மற்றும் பல சட்டப்பிழைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அடிப்படையற்ற, பொய்யான மற்றும் தவறான திசைக்கு அழைத்துச்செல்லும் தகவல்களை அடிப்படையாக கொண்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், வழக்கு கட்டணத்துடன் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
மனுதாரரை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ், சட்டத்தரணி என்ற முறையில் மனுதாரர் இதுபோன்ற குறைபாடுள்ள மனுவை தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியை தனிப்பட்ட தரப்பாக பெயரிட்டு இவ்வாறு மனுவொன்றை முன்வைக்க முடியாதெனவும் நீதியரசர் கூறினார்.
மனுதாரர், சட்டத்தரணி என்ற வகையில் அரசியலமைப்பை பாதுகாப்பதாக தெரிவித்து உறுதிமொழி எடுத்துள்ள நிலையில், அடிப்படை சட்டம் பற்றி கூட தெரியாமல் அவர் மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எழுத்துப்பிழைகளைத் தாண்டி, உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார்.
அடிப்படை உரிமை மனுவில் கோர முடியாத நிவாரணங்கள் கூட கோரப்பட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய நீதிமன்றக் கட்டணமாக 50,000 ரூபாவை செலுத்த வேண்டுமென அறிவித்து மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் ஏகமனதாக தீர்ப்பளித்தது.
156 Views
Comments