தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் மே தின பிரகடனங்களில் இந்தியா தொடர்பில் கூடுதல் கவனம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
03

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் மே தின பிரகடனங்களில் இந்தியா தொடர்பில் கூடுதல் கவனம்

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் மே தின பிரகடனங்களில் இந்தியா தொடர்பில் கூடுதல் கவனம்

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் மே  தின பிரகடனங்களில் இந்தியாவின் பூகோள அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் தமிழ் தேசிய மே நாள் பிரகடனத்தில், அயலக இந்தியாவும் அனைத்துலக நாடுகளும் தமது மனசாட்சிக் கதவுகளை இறுக்க மூடி அமைதி கொள்வது தமிழ் மக்களை வேதனையடைய செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், தமிழ் தேசிய இனம் தமது வாழ்வுரிமையை வென்றெடுப்பதற்கு ஒடுக்குமுறைச் சூழ்நிலைகளின் மத்தியில் போராடும் சக்தியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுகின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் இலங்கை மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மே தின பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புகள் தொடரும் நிலையில், தமிழ் தேசியத்தின் கடல்சார் பொருளாதாரம் திட்டமிட்டு சூறையாடப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மே தின பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இந்திய மீனவர்களுக்கு வடக்கு கடலில் சட்ட ரீதியாகவும் அனுமதியளிக்க முயற்சிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

 

இந்தியா இலங்கை அரசோடு நல்லுறவை, பூகோள அரசியல் நலன்களை பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்தியத்தில் வல்லரசாக தம்மை நிலைநிறுத்திக்கொள்வதையோ தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை என முன்னணியின் தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனினும், தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா தனது பூகோள நலன்களை பூர்த்தி செய்வதற்காக தமிழ் மக்களை பலிகடாவாக்கி தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

views

13 Views

Comments

arrow-up